Friday, January 21, 2011

சூழலுக்கு இசைவாக வாழ நாம் என்ன செய்யலாம்?


  • ''இந்த உலகம் மனிதனுடையது அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும். பூவுலகில் இந்த மகத்தான வாழ்வியல் வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நூலிழை மட்டுமே.மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக பூமியை ஒரு நாள் மாற்றிவிடும். பூமித்தாய்க்கு என்னவெல்லாம் நிகழ்கின்றனவோ, அவையனைத்தும் அவனது குழந்தைகளுக்கும் நிகழுமல்லவா? இந்த வாழ்க்கை வலைக்கு எதிராக அவன் என்ன செய்தாலும், உண்மையில் அவற்றைத் தனக்குத்தானே செய்து கொள்கிறான்.''-அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ், செவ்விந்திய சமுதாயத்தினரிடம் நிலங்களை ஒப்படைக்குமாறு 1854ம் ஆண்டு இட்ட உத்தரவுக்கு பதிலாக சியாட்டில் என்ற நகரில் வாழ்ந்த செவ்விந்திய தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து.
    உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று புவி வெப்பமடைதல். புவி வெப்பமடைதல் பிரச்சினை இன்று பூதாகரமாகி வருகிறது.
    1.வெப்பநிலை அதிகரிப்பு,
    2.கடல்மட்ட உயர்வு,
    3.தண்ணீர் பற்றாக்குறை,
    நோய்கள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபடுவதே புவி வெப்பமடைவதற்கு முக்கிய காரணம்.
    சுற்றுச்சூழல் சீர்கேடும், புவி வெப்பமடைதலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ள சிக்கல்கள். சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் நமது வாழ்க்கை முறைகளில் மாற்றம் தேவை.ஒர் அறையைவிட்டு வெளியேறும்போது, அந்த அறையில் உள்ள விளக்குகள், ஃபேன் உள்ளிட்ட அனைத்து மின்சாதனங்களையும் அணைப்பதில் இருந்து இந்த நடவடிக்கைகளை நாம் தொடங்கலாம்.
    அதிர்ச்சியைக் குறைக்க...
    மின்சாதனங்கள் கீழ்க்கண்ட வகையில் ஒரு யூனிட் மின்சாரத்தை செலவிடுகின்றன:

    # ஏ.சி. பெட்டி ஒரு மணி நேரம் இயங்க, ஹீட்டர் ஒரு மணி நேரம் இயங்க, பிரிட்ஜ் 7 மணி நேரம் இயங்க, டிவி பெட்டி 10 மணி நேரம் இயங்க, ஃபேன் 15 மணி நேரம் ஓட, விளக்கு 29 மணி நேரம் எரிந்தால்.

    # ஹீட்டர், வாஷிங் மிஷின், ஏ.சி., பிரிட்ஜ் போன்றவை அதிக மின்சாரத்தை செலவு செய்கின்றன. ஏ.சி., பிரிட்ஜ் போன்ற குளிர்மைப்படுத்தும் கருவிகள், ஹீட்டர்களை குறைந்த அளவீடுகளில் வைத்து பயன்படுத்துங்கள். ஒரு டிகிரி செல்சியஸ் குறைத்தால்கூட பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படும்.

    # டிவி, டிவிடி பிளேயர் போன்ற எந்த நவீன மின்சாதனத்தையும் 'ஸ்டாண்ட்பை' நிலையில் வைக்க வேண்டாம். இதனால் மின்சாரம் தேவையின்றி விரயமாகும். பயன்படுத்தாத நேரத்தில் கம்ப்யூட்டர் மானிட்டர்களை அணைத்து வைக்கலாம். தேவைப்படாத மின்சாதனங்களை எப்பொழுதும் அணைத்துவிட வேண்டும்.

    # குண்டு பல்புகளில் 90 சதவிகித மின்சக்தி வெப்பமாக மாறி வீணாகிறது. அதேநேரம், சாதாரண குண்டு பல்பு எரிய செலவிடும் மின்சக்தியில் 20 சதவிகிதம் மட்டுமே சி.எப்.எல். விளக்கு எரியத் தேவைப்படுகிறது. எனவே, குண்டு பல்புகளை மாற்றிவிட்டு, சி.எப்.எல். விளக்குகளை பொருத்தினால் மின்செலவு குறையும், மின்கட்டணமும் குறையும். சி.எப்.எல். விளக்கு ஒன்று அதன் வாழ்நாளில் 7,000 மணி நேரம் எரியக்கூடியது.
    மின்சாரத்தை குறைவாகச் செலவு செய்யும் மின்சாதனங்களை தேர்ந்தெடுத்து வாங்கலாம். மின்சாதனங்களை சிறப்பாக பராமரிப்பதன் மூலம் மின்செலவை குறைக்கலாம்.
    இன்னும் தூரம் செல்வோர் யாரும் செய்யலாம்:
  • சிக்னலில் நிற்கும்போது வாகன எஞ்சினை அணைத்து வைக்கலாம்.

    கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் 80 சதவிகித சாலைகளை அடைத்துக் கொள்கின்றன. ஆனால் அந்த வாகனங்களில் பயணம் செய்வோரது எண்ணிக்கை 22 சதவிகிதம் மட்டுமே. அதேநேரம் 75 சதவிகித சாலைப்பயணிகள் பஸ்களில்தான் செல்கின்றனர். எனவே, போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கவும், அதனால் வெளியிடப்படும் புகையால் உருவாகும் நோய்களில் இருந்து தப்பவும் பஸ்களை பயன்படுத்துவோம்.
  • சென்னையில் வாழ்பவர்கள் மின்ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துலாம். நீண்டதூர பயணங்களுக்கும் ரயில்களே சிறந்தவை. விமானங்களில் செல்வதைவிட ரயிலில் செல்வது 10 மடங்கு குறைவான எரிசக்தியையே செலவழிக்கிறது.
  • அருகிலுள்ள காய்கறி கடை, மளிகைக் கடை, பால் வாங்க சைக்கிளிலோ அல்லது நடந்தோ செல்லலாம். சைக்கிள் ஓட்டுவது, நடைப்பயிற்சி உடலை சிறப்பாகப் பராமரிக்கும். நோய்கள் பெருகிவிட்ட நகர வாழ்வில் இந்த இரண்டும் ஆரோக்கியத்துக்கு அவசியம்.
    யாரும் செய்யலாம்:
  • தண்ணீரை சேமிக்க எளிதான வழி தேவைப்படாத நேரத்தில் குழாய்களை அடைப்பது, ஒழுகும் குழாய்களை சீரமைப்பது.
    தண்ணீரை நாம் எப்படி வீணாக்குகிறோம் என்பது பற்றி சந்தேகம் இருந்தால், ஒரு நாளில் எத்தனை முறை மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை நிரப்புகிறோம் என்றும், பயணங்களின்போது குடிநீல் பாட்டில்கள் எத்தனை வாங்குகிறோம் என்றும் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
  • காய்கறி கழுவும்போது, பல்துலக்கும்போது, ஷேவிங் செய்யும்போது குழாயை திறந்துவிட்டுக் கொண்டே வேலை செய்ய வேண்டாம். வாளி அல்லது கப்-பில் எடுத்து பயன்படுத்துங்கள். வாளியில் தண்ணீர் நிரப்பி குளியுங்கள். ஷவரில் குளித்தால் எவ்வளவு நீர் பயன்படுத்துகிறோம் என்றே தெரியாது, தண்ணீர் தேவையின்றி வீணடையும்.
  • ஆங்கில கழிப்பறைகளுக்கு பதிலாக, இந்திய கழிப்பறைகளையே பயன்படுத்துங்கள். அதில் மிகக் குறைவாகவே தண்ணீர் செலவாகிறது. வாகனங்களை கழுவ, செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற ஹோஸ் பைப்பை பயன்படுத்தாதீர்கள். வாளியில் பயன்படுத்தும் போது குறைவாகவே தண்ணீர் செலவாகும்.
  • வீட்டு சுற்றுப்பாதைகள், வெளிப்புறப் பகுதிகள், மரங்களைச் சுற்றி சிமெண்ட் தளம் அமைக்காதீர்கள். மழைநீர் பூமிக்குள் சென்றால் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயரும். சமையலறையில் வெளியேறும் தண்ணீரை தாவரங்களுக்கு பாய்ச்சுங்கள்.
  • பயணங்களின்போது போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் சென்றால், செலவு மிச்சம். பிளாஸ்டிக் பாட்டில்கள் வீணாவதும் குறையும்.

  • இந்தியாவில் 17 கோடி பேர் குடிதண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். வளரும் நாடுகளில் இறந்துபோவோரில் 80 சதவிகிதம் பேர் தண்ணீர் சார்ந்த நோய்களால் பலியாகின்றனர். இப்படி ஒரு நாளைக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 20,000.
  • தண்ணீர் அமிழ்தம் என்றார் ஒரு விஞ்ஞானி. எனவே, அளவோடு பயன்படுத்தாவிட்டால் அந்த அமுதும் நஞ்சாகும், அதாவது தீர்ந்து போகும்

No comments:

Post a Comment