Thursday, March 17, 2011

உலகப் புகழ்பெற்ற காதலர்கள் சகுந்தலை – துஷ்யந்தன்

துஷ்யந்தன் என்பான் ஓர் அரசன். அவன் வேட்டையாட விருப்பம் கொண்டு கானகம் சென்றான். அங்கே ஓர் அழகிய புள்ளிமானைக் கண்டு, அதனைத் துரத்திச் சென்றான்.
வழியில் ஒரு முனிவர் அவனை வழிமறித்தார். “மன்னா, இது தவத்திற் சிறந்த கண்வ முனிவரின் ஆசிரமம் இருக்குமிடம். இங்குள்ள மிருகம் எதனையும் வேட்டையாடலாகாது” என்று எச்சரித்துச் சென்றார்.
கண்வ மகரிஷியைப் பற்றித் துஷ்யந்தன் ஏற்கனவே கேள்வியுற்றிருக்கிறான். அத்தவ மேலோரின் கோபத்திற்கு ஆளாகக்கூடாது என அஞ்சினான். வேட்டையாடும் எண்ணத்தை விடுத்தான். ஆனால், அக்கானகத்தின் எழிற்காட்சியினை இரசித்துக் கொண்டே மெல்ல நடந்து சென்றான்.
சற்றுத் தொலைவில் பெண்டிரின் சிரிப்பொலி அருவி போல் ஒலித்தது.
அந்தச் சிரிப்பொலி வர வர துஷ்யந்தனுக்கு வெகு அருகில் ஒலித்தது. சிரிப்பொலி கேட்கும் திசையில் தன் பார்வையைச் செலுத்தினான் மன்னன்.
அழகு கொழிக்கும் ஆரணங்குகள் மூவர் மன்னன் பார்வைக்கு விருந்தாயினர். அவர்களுள் ஒருத்தி, அழகாலும் தகுதியாலும் அவர்களுக்குத் தலைவியாகத் தோற்றமளிப்பதைக் கண்டான் துஷ்யந்தன். அந்தத் தலைவியின் எழில் அவன் உள்ளத்தைக் கவர்ந்தது. நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவளை!
‘அழகு! அந்த அழகுக்கு மெருகேற்றும் பருவம்! அந்தப் பருவத்தை மிகைப்படுத்திக் காட்டும் அந்த உருவம்! ஆ! இவளன்றோ அப்சரஸ்’!
எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான் இந்தத் துஷ்யந்தன். ஆனால், இப்படியொரு திருவுருவை அவன் வாழ்நாளில் கண்டதே இல்லை!
அவனையும் அறியாமல் அவன் பாதங்களை ஈர்த்தன, அப்பெண்ணின் உருவமும் நடையின் ஒயிலும் சிரிப்பின் சாகசமும்!
மெல்ல அவன், பெண்களுக்கு அருகில் வந்து நின்றான். அவனுக்கும் அப்பெண்களுக்கும் இடையில் அடர்ந்த மல்லிகைக் கொடியே மறைப்பாக இருந்தது.
துஷ்யந்தனுக்கு ஓர் ஐயம் எழுந்தது. ‘இவள் முனிவரின் மகளாய் இருக்க மாட்டாள். என் போன்ற மன்னர் குடும்பத்தில் உதித்தவளாய் இருப்பாள். அதனால் தான் எனக்கு இவள்பால் காதல் உண்டாகின்றதோ?’ என்று மனத்துள் எண்ணிப் பெருமூச்செறிந்தான்.
natpuஅச்சமயம் விதியின் பலனாகவோ என்னவோ
ஒரு கருவண்டு மல்லிகைக் கொடியினை நோக்கிப் பறந்து வந்தது. அங்கே சகுந்தலை நிற்பதைக் கண்டு, அவள் கூந்தலின் மணத்தில் மயங்கி, அக்கூந்தலைச் சுற்றி ரீங்காரம் பாடத் தொடங்கியது.
வண்டினைக் கண்ட சகுந்தலை அச்சமேலீட்டால் வீறிட்டு அலறினாள். “அடி அனுசூயே! பிரியம்வதே! இந்த வண்டை விரட்ட வாருங்களேன்” என்று கூவியபடி மல்லிகைக் கொடியை நீக்கிக் கொண்டு மறுபக்கமாய் ஓடினாள்.
ஓடிய சகுந்தலை, தன்னை அறியாமலேயே, அங்கு நின்றிருந்த துஷ்யந்தனின் மேல் மோதிக்கொண்டாள். எதிரே ஓர் ஆடவன் நிற்பதைக் கண்டு பிரமித்து நின்றாள். அதே நேரத்தில் சகுந்தலையின் கூக்குரலைக் கேட்டு ஓடிவந்தனர் பிரியம்வதையும் அனுசூயையும்.
அங்கு சகுந்தலை முன் ஓர் ஆடவன் நிற்பதைக் கண்டு திகைத்தனர். ஆனால், அந்த ஆடவனின் அழகு அவர்களை மயங்கச் செய்தது.
துஷ்யந்தன், “மன்னிக்க வேண்டும். பெண்கள் தங்கியிருக்கும் உத்தியானவனத்திற்குள் அத்துமீறி வந்தது குற்றந்தான். வழி தவறித்தான் இப்பக்கம் வந்து விட்டேன்” என்று மன்னிப்புக் கோரினான்.
துஷ்யந்தனின் நெடிய உருவமும் திண்தோளும் இனிய தோற்றமும் எழிலார்ந்த முகப்பொலிவும் சகுந்தலையை மெய்மறக்கச் செய்தன. அவள் தலைகுனிந்தபடி நின்றிருந்தாள். அவள் ஓரக்கண்ணால் துஷ்யந்தனின் அழகைப் பருகினாள். “இந்த ஆணழகர் அரச குடும்பத்தைச் சார்ந்தவராய்த் தோன்றுகிறாரே! எந்த நாட்டு மன்னராய் இருப்பார்?’ என்றெல்லாம் நெஞ்சுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள் சகுந்தலை.
“ஐயா, நீர் வழிதவறி வந்ததை நாங்கள் தவறாகவோ குற்றமாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. எனினும், நீர் எந்த நாட்டு மன்னர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டால் அதற்கேற்றவாறு உம்மை உபசரிக்கலாம் என்று கருதுகிறோம்” என்றாள் பிரியம்வதை. ஏனென்றால், அவள்தான் அனுசூயையைவிடச் சற்றுத் துடுக்கானவள்.
natpuஅதைக் கேட்ட துஷ்யந்தன், தான் யார் என்பதைக் கூறவில்லை. மாறாக, மன்னன் துஷ்யந்தன் ஆளுகைக்குட்பட்டுள்ள கானகங்களைக் கண்காணிக்கும் அதிகாரி என்றும், அப்பொழுது அக்கானகத்தின் நடப்பினை ஆராய்ந்து செல்ல வந்திருப்பதாகவும் கூறினான். பின் “ஆமாம், கண்வ முனிவருக்குப் பெண் இருப்பதாக நான் கேள்விப்பட்டதில்லையே!’ என்று மெல்லப் பீடிகை போட்டான்.
அவன் ஐயத்தைப் போக்கும் வகையில் பிரியம்வதை கூறினாள்: ‘எங்கள் சகுந்தலை கண்வ முனிவர் மகள் அல்லள்; வளர்ப்புப் பெண். கௌசிக வமிசத்தைச் சார்ந்த இராஜரிஷியான விசுவாமித்திரரின் அருந்தவப் புதல்வி இவள். தனிமையில் அழுதுகொண்டிருந்த குழந்தையை, எங்கள் கண்வ முனிவர் கண்டெடுத்து, சகுந்தலை என்று பெயர் சூட்டி வளர்த்து வருகின்றார். இவள் தாய் மேனகை ஆவாள்.”
“ஓ! தேவமகள் பேரழகி மேனகையின் மகளா! அவள் வயிற்றில் பிறந்ததால் தான் இந்தச் சகுந்தலை இவ்வளவு அழகு வாய்ந்தவளாய் இருக்கிறாள்!” என மனத்துள் வியப்புற்றான் துஷ்யந்தன். “இவளை நான் அடைய முடியுமா? நான் இவளை விரும்புவதுபோல் இவளும் என்னை விரும்பவேண்டுமே!’ என்றும் ஐயப்பட்டான்.
அப்போது சகுந்தலை நாணத்தால் முகம் சிவந்து, “அடி பிரியம்வதை, எனக்குத் தலை சுற்றுவதுபோல் இருக்கிறது. அப்பால் சென்று ஓய்வெடுத்துக் கொள்கிறேன்” என்று கூறி, துஷ்யந்தனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டுச் சென்றாள். அவள் ஏதோ சொல்லி அவ்விடத்தை விட்டுச் செல்லப் பார்க்கிறாள் என்பது தோழிகளுக்குப் புரிந்துவிட்டது.
ஆகவே, அவளைப் போகவிடாமல் தடுக்க எண்ணிய பிரியம்வதை, ‘அடி சகுந்தலை, உன் சாகசமெல்லாம் நானறிவேன்! மரங்களுக்கு நீர் ஊற்ற வேண்டியது உன்னுடைய முறையாகும். நீ எப்படியடி ஓய்வெடுக்கச் செல்லலாம்! உன் கடனைத் தீர்த்துவிட்டுச் செல்” என்றாள், சற்றே கடுமையான குரலில். அது வெறும் நடிப்பு என்பதை அறியாத துஷ்யந்தன்,
“அவளைப் போகவிடுங்கள். அவள் கடனை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியவாறு தன் விரலில் அணிந்திருந்த கணையாழியைக் கழற்றிப் பிரியம்வதையிடம் கொடுத்துவிட்டு, தரையிலிருந்த குடத்தை எடுக்கப் போனான்.
கணையாழியைப் பெற்றுக்கொண்ட பிரியம்வதை, அதிலும் பொறிக்கப்பட்ட ராஜமுத்திரையைக் கண்டு, “இது அரசருக்குரிய கணையாழியன்றோ!” என்று ஐயம் தொனிக்கக் கேட்டாள்.
மன்னன் சமாளித்துக்கொண்டு, “அரசருக்குரிய கணையாழிதான். அதை அவர் எனக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்” என்றான்.
இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சகுந்தலை மேற்கொண்டு நடக்காமல், பிரியம்வதையைத் திரும்பிப் பார்த்தாள்.
“சகுந்தலை, இம்மன்னன் உன் கடனை ஏற்றுக் கொண்டார். அதனால் நீ போகலாம்” என்றாள் பிரியம்வதை.
சகுந்தலை செல்லமாகச் சிணுங்கினாள்: “என்னைப் போகச் சொல்லவும் நிறுத்தவும் நீ யாரடி?”
சகுந்தலையின் உள் மனத்தை ஓரளவு புரிந்துகொண்டான் துஷ்யந்தன். அவன் மனம் இவ்வாறு எண்ணியது: “இவள் என்னை நேருக்கு நேர் பார்க்க மாட்டேன் என்கிறாள். ஆனால் தன் கடைக்கண்ணை மட்டும் என் மேல் வீசுகிறாளே! வாய் திறந்து ஒரு வார்த்தையும் என்னுடன் பேசவில்லை. எனினும் நான் பேசும்போது எல்லாவற்றையும் காது கொடுத்து உற்றுக் கேட்கிறாளே! இதற்கு என்ன காரணம்?’
இவ்வாறாகத் துஷ்யந்தனும் சகுந்தலையும் தனித்தனியே தமக்குள் காதலை வளர்த்துக் கொண்டிருந்தபோது யாரோ சிலர் ஓடுவது கேட்டது. அவர்கள் உரத்த குரலில் “மதங்கொண்ட யானை ஒன்று மரங்களை ஒடித்து எறிந்துகொண்டு வருகிறது. எல்லோரும் எச்சரிக்கையாய் இருங்கள்” என்று எச்சரிக்கை செய்து கொண்டு சென்றனர்.
natpuஅதுகேட்டுத் தோழிகள் மருண்டு, துஷ்யந்தனைப் பரிதாபமாகப் பார்த்தனர். துஷ்யந்தன் அவர்களுக்குத் தைரியமூட்டும் வகையில், “நீங்கள் ஆசிரமத்திற்கு விரைந்து செல்லுங்கள். நான் அந்த யானையை அடக்கி விரட்டுகிறேன். வாய்ப்புக் கிட்டுமாயின் மீண்டும் சந்திப்போம்” எனக் கூறி அவர்களைப் போய்விடுமாறு தூண்டினான் துஷ்யந்தன்.
தோழியர் இருவரும் புறப்பட்டனர். சகுந்தலை இரண்டடி எடுத்து வைத்தவள், “ஆ! அனுசூயே, என் காலில் முள் தைத்துவிட்டதே!” என்று கூறி பாதத்தைத் தூக்கிப் பிடித்தபடி, துஷ்யந்தனைத் திரும்பிப் பார்த்தாள்.
துஷ்யந்தனும் அவளை ஆழமாக நோக்கினான். அந்த ஒரு கணப் பொழுதில்-
துஷ்யந்தனின் பார்வையைச் சகுந்தலை பார்வையும், சகுந்தலையின் பார்வையைத் துஷ்யந்தன் பார்வையும் கவ்வி இழுத்தன.
அதற்குப் பிறகு துஷ்யந்தன் செயலற்றவனாய் ஆசிரமத்தை வளைய வந்து கொண்டிருப்பதில் ஆனந்தம் கொண்டான். சகுந்தலை அறியாவண்ணம் மறைந்திருந்து அவள் எழிலைப் பார்த்துப் பரவசப்பட்டான்.
நகர் திரும்பவேண்டும் என்கின்ற எண்ணமே எழவில்லை. ஆசிரமத்தருகிலே முகாமிட முடிவு செய்தான் துஷ்யந்தன்.
சகுந்தலையும் சமயம் கிட்டும் பொழுதெல்லாம் ஆசிரமத்து உத்தியாவனத்தில் திரிந்தாள். துஷ்யந்தன் தன் கண்ணில் பட மாட்டானா, அவனிடம் தனிமையில் பேச மாட்டோமா என்று எப்போதும் மன்னனையே நினைத்து ஏங்குவாளானாள்.


உலகப் புகழ்பெற்ற காதலர்கள் லைலா மஜ்னூன்

இஜ்ரி எழுபதாவது ஆண்டில் ஒருநாள்!
அரபு நாட்டில், எங்கோ ஓர் ஊரில் பிறந்தான் கைஸ். பெருவணிகன் ஒருவனின் செல்லப்பிள்ளையாகப் பிறந்த இந்த கைஸ், பிற்காலத்தில் மஜ்னூன் என்று அழைக்கப்பட்டான்.
மஜ்னூன் என்பதற்கு, காதல் பைத்தியம் என்று பொருள்.
கைஸ் ஏன் மஜ்னூன் ஆனான்?
அது ஓர் அபூர்வ கதை!
கைஸ் இளம் வயதில் ஒரு பள்ளியில் பயின்றான். அதே வகுப்பில் அவனுடன் படித்தவள்தான் லைலா. கைஸைப் போன்று லைலாவும் பெருவணிகரின் பெண்.
natpuலைலா, அமீர் குடும்பத்தைச் சார்ந்தவள். கைஸ் வேறு இனக் குடும்பத்தைச் சார்ந்தவன்.
இருவரும் அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே, ஒருவர் உள்ளத்தை ஒருவர் ஆக்கிரமித்துக் கொண்டனர். பசுமரத்தில் ஆணி அடித்தாற்போன்று, அந்த அன்பு அவர்களிடம் ஆழப்பதிந்து விட்டது.
ஒரு சமயம் ஆசிரியர் வகுப்பில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது லைலா, கைஸிடம் பலகையைக் கொடுத்து, அதில் தன் பெயரை எழுதும்படி கூறினாள். கைஸ் எழுதினான், ‘கைஸ்’ என்று. லைலா அதைப் பார்த்துவிட்டு நகைத்தாள். “ஐயே, உனக்கென்ன பைத்தியமா! லைலா என்னும் என் பெயரை எழுதச் சொன்னால், கைஸ் என்று உன் பெயரை எழுதுகிறாயே!” என்றாள்.
அதற்கு கைஸ், “நானா பைத்தியம்! இல்லை நீதான் பைத்தியம். கைஸ் என்று எழுதினால் போதுமே. அதில் லைலாவும் இருக்கிறதே. கைஸ் என்றால் லைலா. லைலா என்றால் கைஸ். இதுகூட உனக்குத் தெரியவில்லையே” என்றான்.
இளம் வயதிலேயே நேசமும் பாசமும் அவர்கள் பிஞ்சு நெஞ்சங்களில் துளிர்விடத் தொடங்கிவிட்டன. அந்த நேசமும் பாசமும் காதலாகக் கனிந்து அவர்களை என்னமாய்ப் படுத்தியது!
கைஸ் இப்பொழுது கவர்ச்சி மிகுந்த காளையாகி விட்டான்.
லைலாவின் பெயர் அவன் உள்ளத்தில் பதிந்து விட்டது போன்று, அவன் வீட்டுச் சுவர்களில் ஓவியங்களாக உருப்பெற்றிருந்தது. பார்க்குமிடமெங்கிலும் லைலாவின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் கைஸ் பெயருடன்.
சின்னஞ்சிறுவராய் இருந்தபோது அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருந்த அந்த இளஞ்சிட்டுகள், பருவமடைந்தபோது பார்க்க முடியாது தவித்தன.
natpuகைஸைப் பார்க்க முடியாது வீட்டிலே அடைபட்டுக் கிடந்தாள் லைலா. அவள் தன்னால் இயன்ற மட்டும் ஓர் ஓவியம் வரைந்தாள். அவள் அதை அடிக்கடி எடுத்துப் பார்த்துப் பரவசமடைந்தாள். அந்த ஓவியத்தில் கைஸின் உருவம் தெரிவதாக அந்தப் பேதைப் பெண் திருப்தியடைந்தாள்.
அது போன்றே கைஸும். எதிர்ப்படும் எந்தப் பொருளையும் லைலாவாக உருவகப்படுத்திப் பார்ப்பதில்தான் அவனுக்கு எத்துணை இன்பம்!
மரத்தில் ஒவ்வோர் இலையிலும் லைலாவின் முகந்தான் அவனுக்குத் தோன்றும். எத்துணை ஆர்வம் அவனுக்கு!
இதனால் கைஸ் என்னும் பெயர் மறைந்து மஜ்னூன் என்னும் சிறப்புப் பெயர் அவனோடு நட்புக் கொண்டது. எப்பொழுதும் ‘லைலா லைலா’ என்று அவன் பிதற்றித் திரிந்தான்.
மஜ்னூன் என்று தன்னை மற்றவர் வழங்குவது கண்டு அவன் வருந்தவில்லை. மாறாகப் பெருமைப்படத்தான் செய்தான்.
மஜ்னூன் என்பது, லைலா தனக்குச் சூட்டியிருக்கும் பட்டப்பெயர் என்றே அவன் கருதினான்; களிப்புற்றான். கைஸின் பரிதாபகரமான நிலை கண்டு அவன் தந்தை பெரிதும் வருந்தினார். பிள்ளையின் மன நிலையை மாற்றியமைக்க வழி என்ன என்று பலரிடம் யோசனை கேட்டார். பலரும் பல யோசனைகள் கூறினர். முடிவல், திருமணம் செய்து வைத்தால் அவன் மனநிலை மாறக்கூடும் என்று எவரோ ஒரு நல்லவர் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்டார் தந்தை.
கைஸின் தந்தையும் தாயும் லைலாவின் பெற்றோரைச் சந்தித்தனர். தம் மகனுக்கு லைலாவை மணம் முடித்து வைக்கும்படி கேட்டனர். ‘இஜ்ரி குடும்பத்தைச் சார்ந்த பெண்ணை வேறு குடும்பத்துப் பையனுக்குக் கொடுக்க முடியாது’ என்று லைலாவின் பெற்றோர் மறுத்துவிட்டார்கள்.
கைஸின் பெற்றோர் மனமுடைந்து வீடு திரும்பினர். இந்தத் தகவலை கைஸிடம் எப்படிச் சொல்வது? அவர்களும் அவனிடம் சொல்லவில்லை. அவனும் அவர்களைக் கேட்கவில்லை.
natpuநாள் ஆக ஆக கைஸின் காதல், வெறியாக மாறியது. வீட்டிலிருக்க மனமின்றி, அவன் தெருத்தெருவாய்ச் சுற்றி அலைந்தான்.
“லைலா! என் லைலா!” என்று கூவியபடி பித்தனாய்த் திரிந்தான். அவன் மனநிலை மட்டுமன்று, அவன் உருவத் தோற்றமும் முற்றிலும் மாறிவிட்டது.
மழிக்கப்படாத முகம்; கலைந்து காற்றிலே பறக்கும் தலை; அழுக்கேறி கிழிந்து தொங்கும் ஆடை; லைலாவின் பெயர் கூறும் வறண்டு போன உதடுகள்; சோகத்தின் சின்னமாய்க் குழி விழுந்த கண்கள்!
இந்தத் தோற்றத்தைக் கண்டு சிறுவரும் சின்னப் புத்திக்காரரும் அவனைக் கேலி செய்தனர்; கல்கொண்டு தாக்கினர். ஆனால் கலங்கவில்லை கைஸ். ‘லைலா லைலா’ என்று இடைவிடாது உச்சரித்துக்கொண்டே இருந்தான்.
ஒரு சமயம் கைஸைச் சிலர் கல்லால் அடித்துப் பரிகசித்துக் கொண்டிருந்தனர். அதுசமயம் லைலா அவ்வழியாகப் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். கைஸ்மீது கல் எறியும் கோரக் காட்சியைக் கண்டு அவள் துடிதுடித்தாள். “அடப்பாவிகளா! என் கைஸின் உடலை இப்படிச் செதுக்குகிறீர்களே; நீங்கள் நாசமாய்ப் போக” என்று குமுறினாள்.
அதைக் கண்ட கைஸ், “என் அன்பார்ந்த லைலாவே, இவர்கள் என்னைச் செதுக்கவில்லை. உன்மேல் நான் கொண்ட ‘காதல் மாற்று’ உயர்ந்ததுதானா என்றறிய உரைத்துப் பார்க்கின்றனர், என் உடலை; அவ்வளவு தான்” என்று கூறினான்.
கல்லெறிந்து ‘விளையாடும்’ நல்லவர்க்கு ‘வேலை’ கொடுக்க விரும்பவில்லை கைஸ். அதனால் அவன் நகர்ப்புறத்தைவிட்டு வெளியேறிக் காடுகளைத் தஞ்சமடைந்தான்.
காடுகளில் திரிந்த கைஸ் அங்குள்ள மரங்களையும் விட்டு வைக்கவில்லை. அவன் தன் கைவண்ணத்தால் அம்மரங்களில் ‘லைலா’வின் முத்திரையைப் பதித்து வைத்தான். மரங்களைத்தேடி லைலாவின் பெயரைப் பொறிப்பதிலேதான் அவனுக்கு எத்துணை இன்பம்!
கைஸ் வீட்டைவிட்டுச் சென்றதால் மனமொடிந்த அவன் தந்தை, அவனைத் தேடி அலைந்தார். பல நாள்களுக்குப் பிறகு, கைஸ் இருந்த இடத்தைக் கண்டு பிடித்தார். வீட்டுக்கு வருமாறு வேண்டினார்.
“லைலா இருக்குமிடந்தான் எனக்குச் சொர்க்கம். அவள் இங்கே ஆயிரக்கணக்கான மரங்களில் வாழ்கிறாள். எந்தப் பக்கம் திரும்பினாலும் அவள் திருமுகத்தை நான் பார்க்கிறேன். ஓ, இந்தச் சொர்க்கத்தை விட்டு நரகத்திற்கு அழைக்கிறீர்களே!” என்று ஆனந்தப் பரவசத்துடன் கூறித் தந்தையை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் கைஸ்.
இதற்கிடையில் இப்னு சலாம் என்னும் வணிக இளைஞன் ஒருவன் லைலாவின் வீட்டுக்கு வந்தான். தூரத்து உறவினன் அவன். லைலாவின் அழகில் அவன் மயங்கினான். அவன் அவளைத் தன் வசமாக்க எத்தனையோ தந்திரங்கள் செய்து பார்த்தான்.
லைலாவோ அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவள் நினைவெல்லாம் கைஸ் மீதே இருந்தது. அதனால் அவன் பேச்சையும் சாகசத்தையும் இலட்சியம் செய்யாமல் மௌனம் சாதித்தாள்.
லைலாவின் அழகிலே மயங்கிய அந்த இளைஞன், தனக்கு லைலாவை மணம் முடித்து வைக்குமாறு அவன் பெற்றோரிடம் வேண்டினான். அவள் பெற்றோரும் அவன் கோரிக்கையை ஏற்றனர். ஆனால் அதற்கிடையில்,
natpuமஜ்னூனுக்கு நண்பன் ஒருவன் இருந்தான். அவன் மஜ்னூனின் மீது அனுதாபம் கொண்டு, லைலாவின் பெற்றோரை அணுகினான். “உங்கள் பெண்ணைக் கைஸுக்குக் கொடுங்கள். இல்லையெனில் என்னுடன் போர் புரிய முன் வாருங்கள்!” என்றான்.
லைலாவின் பெற்றோர் அவன் கருத்துக்கு இசையவில்லை. ஆகவே, அந்த நண்பன் வெகுண்டு, தன் ஆள்களைக் கொண்டு அவர்களைத் தாக்கினான்; அவர்கள் வீட்டைச் சூறையாடினான்.
இதைக் கேள்வியுற்ற கைஸ் மிகவும் வருந்தினான். நண்பன் செய்தது தவறு என்று கடிந்து கொண்டான். அதனால் அந்த நண்பன், அவனை விட்டுவிட்டு ஒதுங்கிப் போய்விட்டான்.
அதன் பிறகு லைலாவுக்கும் வியாபாரி இளைஞனுக்கும் திருமணம் நடந்தேறியது.
காட்டில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூனுக்கு இவ்விஷயம் எட்டிற்று. லைலாவை எண்ணி மேலும் வருந்தினான், வேதனைப்பட்டான்.
அன்று அந்தக் காட்டிலே மான்களைப் பிடிப்பதற்காக வேட்டைக்காரர்கள் வலை விரித்திருந்தனர். சிறிது நேரத்தில் இரு மான்கள் அந்த வலையில் சிக்கித் தவித்தன. மான்களின் தவிப்பைப் பார்த்து மஜ்னூன் மிகவும் பரிதாபப்பட்டான்.
“ஓ! லைலாவின் கண்களையொத்த விழிகளைக் கொண்ட இந்த மான்களைப் பிடித்துத் துன்புறுத்துவதா? கல் நெஞ்சர்கள் நாசமாய்ப் போக” என்று சபித்துக் கொண்டே, அந்த வலையிலிருந்த மான்களை விடுவித்தான் மஜ்னூன்.
லைலாவின் திருமணத்திற்குப் பின் அவளுக்கு ஒரு கடிதம் எழுதினான் கைஸ். அதை எப்படியோ லைலாவிடம் சேர்ப்பித்து விட்டான்.
கைஸின் நினைவால் ஏக்கமுற்றிருந்த லைலாவுக்கு அந்தக் கடிதம் பாலைவனச் சோலையாய் காட்சி அளித்தது. கணவனுக்கு எப்படியோ போக்குக் காட்டிவிட்டுக் கட்டுக்காவலையும் மீறி, கைஸிடம் புறப்பட்டுப் போனாள் லைலா.
அவள் எத்தனை ஆவலோடு சென்றாள்! எத்தனை ஆசைகளை உள்ளடக்கிக் கொண்டு போனாள்! என்ன என்னவெல்லாம் பேசிக் காதலனைக் களிப்பூட்டவேண்டும் என்று கருதிச் சென்றாள்!
ஆனால், நடந்த்தென்ன?
லைலாவைக் கண்டதும் கைஸ் ஓடோடியும் வந்து, அவளை அணைத்து, ஆசை தீர முத்த மழை பொழிந்தானா?
இல்லை!
என்ன காரணத்தினாலோ, கைஸ் பிசைந்து வைத்த களிமண் உருண்டையைப் போல, விறைப்பாக உட்கார்ந்திருந்தான். லைலாவின் வருகை அவனுள் எந்தவித மாற்றத்தையும், உந்துதலையும் உண்டாக்கவில்லை. மௌனத்தின் முழுமையிலே அசையாமல் சிலையாய் உட்கார்ந்திருந்தான்!
இது ஆசைகளைச் சுமந்து வந்த லைலாவுக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. இருப்பினும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கைஸின் பக்கத்தில் போய் அமர்ந்தாள்.
அவன் பக்கத்திலே அமர்ந்ததும் அவளும் ஊமையானாள். கொப்புளித்து வெளிப்படத் துடித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகள் அவள் உள்ளத்திலேயே அமுங்கிப் போயின.
காதலரிருவரும் பேச்சிழந்து, உணர்வு மங்கி, மௌனமாயிருந்தது உண்மை. ஆனால், அந்தப் பொல்லாத மௌனத்திலும் எல்லை மீறிய ஒருவித இன்பத்தைத் துய்த்தனர். அதை அவர்கள் மனம் அறியும்!
natpuஅவர்கள் வாய் மூடியிருந்தாலும், மானசீகமாய் அவர்கள் பேசிக் கொண்ட மொழி என்னவாயிருக்கும்?
அவர்கள் உடல் ஆடாது அசையாது சிலைபோல் அமர்ந்திருந்தாலும் அவர்கள் உள்ளம் இளஞ்சிட்டுகளாய் சிறகடித்துச் சென்று வானிலே வட்டமிடுவதை யார் அறிவர்?
இறுதியாகத் தோற்றுப்போனவள், லைலாதான். ஏனெனில் அவள்தான் முதலில் வாய்திறந்து பேசினாள். உடைந்தெழும் உள்ளத்து உணர்ச்சிக்கு முதலில் உருவம் கொடுத்தவள் அவள்தான். கைஸ் மீது மெல்லச் சாய்ந்தாள்.
“ஓ, என் இன்பமே! கல்லையும் முள்ளையும் பொருட்படுத்தாமல் இந்தக் காட்டில் அங்குமிங்கும் அலைந்து உன்னைக் கண்டுபிடித்தேன். குரலினிமை மிக்க குயில், பறவை பூக்கள் இல்லாத வெற்று மரத்தின்மீது அமர்ந்து தன் தீங்குரலெழுப்பிப் பாடுமாம். ஆனால், வாசமலர் நிறைந்த பூங்காவிலே அது நுழைந்ததும் வாயடைத்துப் பாடுமாமே! அது போன்றல்லவா இருக்கிறது உன் மௌனமும்! லைலா, லைலா என்று ஓயாமல் உச்சரிக்கும் உன் வாய், பேசும் சக்தியை இழந்துவிட்டதா? நான் இல்லாதபோது, ‘லைலா லைலா’ என்று பிதற்றுகின்ற உன் வாய், உன் பக்கத்தில் நான் வந்து அமர்ந்ததைப் பார்த்தும், வாயடைத்து மௌனம் சாதிப்பது ஏன்? என்று புலம்பினாள் லைலா.
கைஸ் உடல் அசைந்தது. அவன் சொன்னான்:
“லைலா, என் தெய்வமே! உன்னிலே நானும், என்னிலே நீயும் உறைகின்றோம். அப்படியிருக்க நம்மை பிரித்துப்பேசுவது ஏன்? இனி நம் சந்திப்பு தொடரட்டும். நேரமும் வாய்ப்பும் கிடைக்கிற போதெல்லாம் இங்கே வந்துவிடு. ஆசைதீரப் பொழுதைக் கழிப்போம். நீ இறுதி மூச்சு உள்ளவரை இந்தச் சந்திப்பும் இந்த உறவும் நீடிக்கட்டும். நீ வந்து நேரமாய் விட்டது. இப்பொழுது போ. நாளை வா. நாளை மறுநாளும் வா. அதுக்கப்புறமும் வா” என்று கூறி லைலாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் மஜ்னூன்.
லைலா பிரிந்து போக மனமின்றிப் பிரிந்து சென்றாள்.
“நாளையும் வா, நாளை மறுநாளும் வா” என்று மஜ்னூன் அன்புக் கட்டளையிட்டு லைலாவை அனுப்பி வைத்தானே-
அவன் அன்புக் கட்டளையை நிறைவேற்றுவதற்கு லைலா காத்துக் கொண்டுதான் இருந்தாள். நாளைக்கு மஜ்னூனிடம் செல்ல வேண்டுமென்று. அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கத்தான் செய்தாள் லைலா.
ஆனால், ஆனால்......... !
லைலாவைப் பொறுத்த மட்டில் அந்த ‘நாள்’ விடியாமலேயே போய் விட்டது!
ஆம்; அன்றிரவு படுக்கச் சென்ற லைலா, மஜ்னூனை மனத்தில் நிறுத்தியபடி படுக்கச் சென்ற லைலா-
விடியற்காலை விடிந்தும்கூட அவள் கண்மலர்கள் விரியாமல் மூடிக் கிடந்தன.
லைலா, மஜ்னூனைத் தேடி மானசீகமாய்ப் பறந்து சென்றாளோ!
லைலா மடிந்து போனாள் என்ற சேதியைக் கேள்வியுற்ற மஜ்னூனும் மூச்சையடக்கித் தரையில் சாய்ந்தான்.
லைலா...... ! மஜ்னூன்....... !
உயிரோடிருந்தபோது ஒன்று சேர்க்க விரும்பாத ஜடங்கள், அவர்கள் உயிர்த்தியாகம் புரிந்து கொண்டபின், ஒன்று சேர்க்க முனைந்தது ஏனோ?
லைலாவையும் மஜ்னூனையும் ஒரே கல்லறையில் வைத்து அடக்கம் செய்தனர்.
காலம் உள்ளவரை, லைலா-மஜ்னூனின் காதல் கதையை மறக்க முடியுமா?