Wednesday, January 19, 2011


ÀÊò¾¾¢ø À¢Êò¾Ð-¿ýÈ¢ áÁ¸¢Õ‰½ý

காதல்மேஜை.


முள்கரண்டி ஒன்று வெள்ளியால் ஆன ஸ்பூன் ஒன்றை நீண்ட நாட்களாக காதலித்து கொண்டிருந்தது. இருவரும் மிக நெருக்கமாக ஒரே மேஜையில் இருந்தபோதும் ஒருவரோடு மற்றவர் பேசிக் கொள்ளவோ, அணைத்துக் கொள்ளவோ விரும்பவில்லை.



பிரிக்க முடியாதபடி தங்கள் இருவருக்கும் ஒரு பிணைப்பு உள்ளது என்றது முள்கரண்டி. ஸ்பூனோ அதை பெரிதாக கண்டு கொள்ளவேயில்லை.
மாறாக ஸ்பூன் சொன்னது முள்கரண்டிகள் அருவருப்பானவை. அவை எதையும் லாவகமாக கையாளுவதேயில்லை. குத்தி கிழிப்பது தான் அதன் சுபாவம் என்றது.



முள்கரண்டி தீராத காதலுடன் சொன்னது தேனில் கிடந்து ஸ்பூன்களின் குரலும் கூட இனிப்பான இருக்கிறது. அதற்காகவே காதலிக்க விரும்புகிறேன்.



அதை கண்டு கொள்ளாத ஸ்பூன் வெல்வெட் துணியில் புரண்ட படியே சொன்னது முள்கரண்டிகள் நிம்மதியற்றவை. அவை மூன்று நாக்குகள் கொண்டிருக்கின்றன. நடந்ததையும் நடப்பதையும் நடக்க போவதையும் ஒன்றாக குழப்பிக் கொள்ள கூடியவை என்றது.



அப்போதும் காதல் அடங்காத முள்கரண்டி சொன்னது ``ஸ்பூன்கள் கச்சிதமானவை. அளவுக்கு மீறி எதையும் அவை ஏற்றுக் கொள்வதேயில்லை. என்ன நளினம். என்ன ஒய்யாரம். இதற்காகவே காதலிக்க விரும்புகிறேன் என்றது.



ஸ்பூன் அசட்டையுடன் சொன்னது முள் கரண்டிகள் ஒரு போதும் சூப்பின் சுவையை அறிய முடியாது. உப்பும் சக்கரையையும் ஒரு போதும் தீண்டமுடியாது. ஐஸ்கிரீமின் குளிர்ச்சியை ஒரு போதும் உணரவே முடியாது. பாவம் அர்த்தமற்ற வாழ்க்கை.



அதை கேட்டு சற்றே எரிச்சலுற்ற முள்கரண்டி சொன்னது ஸ்பூன்கள் வெட்கமற்று மனிதர்களின் நாக்கை முத்தமிடுகின்றன. தடவி கொடுக்கின்றன. நான் ஒரு போதும் அப்படி இருப்பதேயில்லை.


கோபத்துடன் இரண்டும் முகத்தை திருப்பிக் கொண்டன.



வீட்டின் உரிமையாளன் உணவு மேஜைக்கு வந்து சேர்ந்தான். சூடான சூப்பிற்குள் ஸ்பூனை தூக்கிபோட்டான். முள்கரண்டியை ஆவி பறக்கும் இறைச்சியின் நடுவில் குத்தினான். இரண்டும் மௌனமாகின. பசி தீருமட்டும் சாப்பிட்டுவிட்டு எச்சில்பட்ட ஸ்பூனையும் முள்கரண்டி இரண்டும் ஒன்றாக தட்டில் போட்டு எழுந்து சென்றான்.



சுத்தம் செய்யப்படுவதற்காக இரண்டும் ஒரே தண்ணீர் வாளிக்குள் போடப்பட்டன. மிகுந்த ஆவேசத்துடன் ஸ்பூனை கட்டி தழுவியபடியே முள்கரண்டி சொன்னது.


அன்பே இந்த நிமிசத்திற்காக தான் காத்துக் கொண்டிருந்தேன்.



ஸ்பூனும் முள்கரண்டியும் மாறி மாறி காதலுடன் முத்தமிட்டு கொண்டன.



***

No comments:

Post a Comment