Thursday, January 20, 2011

எத்தனுக்கு எத்தன்!

ஏமாறுவதற்கு ஆட்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர் களுக்குக் கொண்டாட்டம்தான். 1922-ல் லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் ஆர்தர் பெர்குசன் என்பவர் உலவிக் கொண்டிருந்தார். அப்போது ஓர் அமெரிக்கர், அங்குள்ள நெல்சன் நினைவுத் தூணை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார். தன்னை ஒரு வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக் கொண்டார் ஆர்தர். போரில் பட்ட கடனைத் தீர்க்க புராதனப் பொருட்களை இங்கிலாந்து விற்று வருவதாகவும், அந்த வேலையை ரகசியமாகத் தன்னிடம் ஒப்படைத்திருப்பதாகவும் ஆர்தர் கூறினார். தொடர்ந்து பேசி அந்த அமெரிக்க நாட்டவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்திய ஆர்தர், நெல்சன் தூணை விலை பேசி அதற்குரிய தொகையை யும் வாங்கிக் கொண்டுவிட்டார். தூணை வாங்கியவர் அதைப் பிரித்து எடுப்பதற்கு ஒரு காண்டிராக்டரை அணுகியபோதுதான் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தார்.

அதேபோல, புகழ்பெற்ற பிக்பென் கடிகாரத்தையும் மற்றொரு அமெரிக்கரிடம் ஆயிரம் பவுண்டுகளுக்கு விற்றுவிட்டார் ஆர்தர். பக்கிங்காம் அரண்மனையை மற்றொருவரிடம் விலை பேசி 2 ஆயிரம் பவுண்டு முன்பணம் பெற்றார். அத்துடன் நிற்கவில்லை. அமெரிக்க வெள்ளை மாளிகையை ஆண்டுக்கு லட்சம் டாலர் வீதம் 99 வருடக் குத்தகைக்கு விட்டு, முதல் வருடத் தொகையை முன்பணமாகப் பெற்றார்.

அடுத்து ஆஸ்திரேலியர் ஒருவரிடம் நியார்க் சுதந்திரதேவி சிலையை விலை பேசினார். பேரம் முடிந்ததும் இருவரும் சிலை முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் பின்னர், ஆஸ்திரேலியாவில் இருந்து தொகை வந்து சேரத் தாமதமானது. ஆர்தர் பெர்குசனோ அவசரப்பட்டார். ஆஸ்திரேலியருக்கு சந்தேகம் வரவே, போலீசை அணுகினார். ஆர்தர் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.

1930-ம் ஆண்டு விடுதலையான ஆர்தர் பெர் குசன், லாஸ் ஏஞ்சல்ஸில் குடியேறினார். தான் சம்பாதித்த பெருந்தொகையைக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து, 1938-ல் காலமானார்.

No comments:

Post a Comment