Wednesday, January 19, 2011


சித்திரமீன்.


ஆறு வயதிருக்கும் அந்த சிறுவன் தனியே உட்கார்ந்து தனக்குதானே பேசியபடியே கலர் பென்சிலால் படம் வரைந்து கொண்டிருந்தான்.



ஒரு வீட்டை வரையும் போது யாருமே அங்கே இருக்கிற மீன் தொட்டியை கவனிச்சி வரையுறதேயில்லை.



மீன் தொட்டியை வரையுறது ரொம்ப கஷ்டம்.



உலகத்திலயே தண்ணியை வரையுறது தான் ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி வரைஞ்சாலும் அது தண்ணி மாதிரியே இருக்காது.



அந்த தண்ணிக்குள்ளே நீந்திக்கிட்டிருக்கிற மீனை வரையுறது முடியவே முடியாது. அந்த மீன் ஒரு இடத்தில நிக்கவே மாட்டேங்குது. எப்பாவது நின்னா அசைஞ்சிகிட்டே நிக்குது. பிறகு மீனு நினைச்சி நினைச்சி ஒடிக்கிட்டு இருக்கு.



படத்தில வரைஞ்ச மீனு அசையுறதேயில்லை. அதை அசைக்கிறதுக்காக நான் தான் பேப்பரை ஆட்ட வேண்டியிருக்குது. அப்போ கூட மீன் முன்னாடி போறதேயில்லை.



படத்தில் வரைஞ்ச மீன் ஏன் நீந்தமாட்டேங்குதுனு தெரியுமா அதுக்கு ஒரு மேஜிக் பிரஷ் இருக்கு. அதை வச்சி வரையணும். அப்போ அந்த மீனு நீந்தும்.



மீனை வரையும் போது அதோட கண்ணை வரையுறது லேசில்லை. கண்ணுக்குள்ளே என்னமோ இருக்கு. அது சுத்திகிட்டே இருக்கு. அது நம்மளை பாத்துகிட்டே இருக்கு. சிரிக்குது. மீனுக்கு நிறைய ட்ரீம்ஸ் வரும். அந்த ட்ரிம்ல அது பஸ்மேல நீந்திகிட்டு போகும். ப்ளைட் மாதிரி ஆகாசத்தில நீந்திகிட்டு இருக்கும்.



எனக்கு வீட்டை வரையுறது பிடிக்காது.


அதுல கடல் இருக்காது



மரம் இருக்காது


பூ இருக்காது



அணில் இருக்காது.



மேகம் இருக்காது



சூரியன் இருக்காது.



ஒரு பறவை கூட இருக்காது



ஒண்ணுமே இருக்காது.



எனக்கு எங்க வீட்டை தவிர வேற ஒண்ணுமே வரைய தெரியாது.



ஆனா வீட்டை வரையும் போது யாருமே மீன் தொட்டியை வரையுறதேயில்லை.



தனியே உட்கார்ந்து சிறுவன் தனக்குதானே பேசியபடியே படம் வரைந்து முடித்திருந்தான்.


***

No comments:

Post a Comment