சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் அனைவரும் தாங்கள் அடைந்த தவப் பயனின் பலன் முழுவதும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, மனிதன் நோயின்றி ஆரோக்கியமாக வாழ மருத்துவ முறைகளை போதித்தனர். மேலும் கால நேர கணக்குகளை கணித்து அண்ட சராசரங்களின் நிலைகளை உணர்ந்து அவை மனிதனை பாதிக்காதவாறு எப்படி செயல்படவேண்டும் என்பதை கூறியுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகா வரிசையில் சலபாசனம் பற்றி அறிந்துகொள்வோம்.
சலபாசனம்
சலபம் என்ற வடமொழி சொல்லுக்கு வெட்டுக்கிளி என்று பொருள். வெட்டுக்கிளிகள் செடிகளை வெட்டி அழிப்பதுபோல், நோய்கள் அனைத்தையும் வெட்டி வேரறுக்கும் ஆசனம் சலபாசனமாகும். மேலும் இவ்வாசனம் வெட்டுக் கிளி போல் அமைவதாலும் இப்பெயரிட்டு அழைக்கின்றனர்.
செய்முறை
· தரைவிரிப்பின் மீது மல்லாந்து படுத்து உடலை சீராக்கி, பின் மெதுவாக குப்புற படுக்க வேண்டும். கைகளைப் பின்புறம் நீட்டிக்கொள்ளவும்.
· முகத்தை முன் தூக்கி முகவாய்க்கட்டை அதாவது தாடையை தரையில் ஊன்றியபடி தலையை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
· இரண்டு கை விரல்களையும் இரண்டு தொடைகளுக்குக் கீழ் வைத்துக் கொள்ளவும்.
· நன்கு மூச்சை இழுத்து கைகளை தரையில் அழுத்தி தலை, கழுத்து, மார்பு, தோள் பட்டைகளை மேலே தூக்க வேண்டும்.
· அச்சமயம் கால்களும் மடங்காமல் 450 கோணத்தில் உயர்த்த வேண்டும்.
· இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்து விட்டு பின் மெதுவாக மூச்சை வெளிவிடவேண்டும்.
· அப்போது கண்களையும் தலை, கழுத்து, மார்புப் பகுதி ஒரே நேரத்தில் பழைய நிலைக்குத் திருப்ப வேண்டும்.
· ஆரம்பத்தில் இவ்வாசனம் செய்வது கடினமாகத் தோன்றும். பயிற்சி பெற பெற சீராகும். மூன்று அல்லது நான்கு முறை செய்வதோடு நிறுத்திவிடவேண்டும்.
பயன்கள்
· வயிற்றுப்பகுதி அழுத்தப்படுவதால் உடலின் இடுப்புப் பகுதி பலமடைகிறது. குடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைக்கப்பட்டு தொப்பையைக் குறைக்கிறது.
· மேலும் வயிற்றுப் பகுதிக்கு அதிக இரத்தம் செல்வதால் செரிமான சக்தி அதிகரிக்கிறது. சிறுநீரகத்தை நன்கு செயல்படச்செய்கிறது.
· ஆண்மை சக்திபெருகும். பாலுறவுச் சுரப்பிகள் பலமடையும். கல்லீரல், மண்ணீரல், கணையம் போன்ற உறுப்புகள் பலம் பெறும்.
· மலச்சிக்கலைப் போக்கி, மூல நோயின் பாதிப்பிலிருந்து விடுபட வைக்கும். அதிக அளவு பிராணன் உட்செல்வதால் நுரையீரல் நன்கு சுருங்கி விரிகிறது.
· முதுகை பின்னால் வளைப்பதால் தண்டுவடம் வலுவடைந்து நன்கு பலப்படும். சோம்பல் இன்றி எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும்.
· மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் உள்ளவர்களும், இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் இவ்வாசனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
குருவின் ஆலோசனைப்படி கேட்டு ஆசனம் செய்வது சாலச்சிறந்தது.
No comments:
Post a Comment