Sunday, August 17, 2014

சர்க்கரை வியாதி என்றால் என்ன?

இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் உள்ள சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை 2 கோடி. உலக சுகாதார நிறுவனத்தின் கணிப்புப்படி இந்த எண்ணிக்கை 2025-ல் 5.7 கோடியாக உயரும்.
சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகங்கள், கண்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் மருத்துவச் செலவும் அதிகமாகிறது. எனினும் சர்க்கரை நோய் காரணமாக கால்கள் பாதிக்கப்படுவோர் அதிகம். எங்கும் நகர விடாமல் ஆளை முடக்கி விடும் சக்தி சர்க்கரை நோய்க்கு உண்டு. சர்க்கரை நோய் காரணமாகவே 40 முதல் 72 சதவீதம் பேர் கால்களை இழக்கின்றனர். எனவே “சர்க்கரை நோயும் கால்களும்’ என்பதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
55 வயது ஆகும்போது…: உடலில் கால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு காலிலும் 26 எலும்புகள், 19 தசைகள், 32 இணைப்பு மூட்டுகள் (Joints) உள்ளன. ஒருவர் 55 வயதை எட்டும் நிலையில், தனது வாழ்நாளில் 70 ஆயிரம் மைல்கள் நடந்திருப்பார். அதாவது உலகை இரண்டு முறை சுற்றிவருவதற்கு இத் தொலைவு சமம்.
முக்கிய அறிகுறிகள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பான அளவை (சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140 மி.கி.) தாண்டும்போது உடலில் கோளாறுகள் தெரிய ஆரம்பிக்கும். அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், காயம் ஏற்பட்டால் ஆறாமல் இருத்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டால் ரத்த சர்க்கரை அளவை உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.
உணர்ச்சி குறைதல்: ரத்தத்தில் சர்க்கரை (குளுக்கோஸ்) அளவு அதிகரிக்கும் நிலையில், கூடுதல் குளுக்கோஸ் ஆற்றலாக மாறாது; அது “சார்பிடால்’ என்ற வேதிப்பொருளாக மாறும். இந்த வேதிப் பொருள் கால்களில் உள்ள சிறு சிறு நரம்புகளைப் பாதிக்கத் தொடங்கும்.
இதனால் காலில் உணர்ச்சி குறையத் தொடங்கும். உணர்ச்சி குறைவதால் காலில் ஏதாவது குத்தினால்கூடத் தெரியாது. இரவில் படுத்தவுடன் பாதத்தில் எரிச்சல் ஏற்படும். ஊசியால் குத்துவதுபோல் வலி இருக்கும். பகலில் நடக்கும்போது பஞ்சு மெத்தையில் நடப்பதுபோல் இருக்கும்.
ஆடு சதையில் குடைச்சல்: ஒரு சில சர்க்கரை நோயாளிகளுக்கு ஆடு சதையில் குடைச்சல் ஏற்படும். கால் நரம்புகளின் பாதிப்பு காரணமாக ரத்த ஓட்டம் குறைந்து ஆடு சதையில் வலி உருவாகும். இவையெல்லாம் “சார்பிடால்’ வேதிப்பொருள் ஏற்படுத்தும் விளைவுகள். இவ்வாறு அதிக சர்க்கரை காரணமாக கால் நரம்புகள் பாதிக்கப்படுவதற்கு “டயபட்டிக் நியுரோபதி’ என்று பெயர். எனவே பாதத்தில் எரிச்சல் உள்பட அறிகுறிகள் தெரியத் தொடங்கிய உடனேயே மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
சேற்றுப் புண்: தண்ணீரில் அதிகம் வேலை செய்வதால் பெண்களுக்கு கால் விரல் இடுக்குகளில் சேற்றுப் புண் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ரத்தத்தில் அதிக சர்க்கரை இருந்தால், கிருமிகள் புண்ணை ஆறவிடாமல் செய்துவிடும். எனவே சர்க்கரை நோய் உள்ள பெண்கள், விரல் இடுக்குகளில் புண் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். விரல் இடுக்குகளை அவ்வப்போது துடைத்து உலர்ந்த தன்மையோடு பராமரிப்பது அவசியம்.
அலட்சியம் வேண்டாம்: பலவீனம் காரணமாகவே காலில் எரிச்சல், குடைச்சல், வலி ஏற்படுகிறது என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். ஏனெனில் மேற்சொன்ன அறிகுறிகளை “அறிவித்த’ பிறகு, ரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரை அளவு ஒரு காயத்துக்காகக் காத்திருக்கும்.
பிரச்சினை ஏதுமில்லாமல் உடல் ஆரோக்கியமாக உள்ளவர்களுக்கு காயம் ஏற்படும்போது, ரத்த வெள்ளை அணுக்கள் காயத்தைச் சூழ்ந்து போர் வீரர்களாகச் செயல்படும்; அதாவது வெளியிலிருந்து எக்கிருமியையும் காயத்துக்குள் அவை அனுமதிக்காது.
ஆனால் அதிக சர்க்கரை அளவு காரணமாக காலில் காயம் ஏற்படும் நிலையில், ரத்த வெள்ளை அணுக்களின் போர்க் குணம் செயலிழந்த தன்மைக்குச் சென்று விடும். ஆக, வெளியில் உள்ள கிருமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சிறிய கீறல், சீழ் கொண்ட ஆறாத புண்ணாக மாறும்.
நடக்க முடியாது: சிறிய கீறல், புண்ணாக மாறிய பிறகும் உரிய மருத்துவ சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால், காயம் ஏற்பட்ட பகுதி வீங்கத் தொடங்கும். நடக்க முடியாத கடும் வலி இருக்கும். தோலில் சிவப்புப் புள்ளிகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.
அப்போதும் கவனிக்காத நிலையில், சீழுடன் கூடிய புண் உள்ள செல்கள் போரில் தோற்று மடியத் தொடங்கும். புண் ஏற்பட்ட இடம் மெதுவாக கருகி அழுகத் தொடங்கும். இவ்வாறு படிப்படியாக காயம் ஏற்பட்ட பகுதி அழுகும் நிலைக்கு “காங்கிரின்’ (Gangrene) என்று பெயர். அந்த இடத்தைத் தொட்டால் “ஜில்’லென்று இருக்கும்.
இரண்டே நாளில்…: இவ்வாறு சிறு காயம், புண்ணாகி அழுகுவதற்கு இரண்டு நாள் அலட்சியம் போதும். காயம் ஏற்பட்ட பகுதியில் செல்கள் முழுவதும் அழுகி மடிந்துவிட்ட நிலையில், நோய்த் தொற்று மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் தடுக்க கால் விரலை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருக்கும். பாதம் முழுவதும் அழுகும் நிலையில் முழங்கால் வரை காலை அகற்ற வேண்டியிருக்கும்.
காலைக் காக்க சிகிச்சை என்ன? ஆறாத காயத்துடன் நோயாளி வந்தவுடன், ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதனை செய்ய வேண்டும். ரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் முதலில் இன்சுலின் ஊசி மருந்து செலுத்தி ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இன்சுலின் ஊசி மருந்து போட்டால்தான் காயம் விரைவாக ஆற ஆரம்பிக்கும்.
காயம் ஆறுவதன் அறிகுறி என்ன? தோலுக்குள் உள்ள சீழின் அளவு குறைவாக இருந்தால் மாத்திரைகள் மூலமே கரைத்துவிட முடியும். மாறாக, சீழின் அளவு அதிகமாக இருந்தால், அறுவைச் சிகிச்சை மூலம் அந்த இடத்தைக் கீறி சீழை அகற்ற வேண்டியிருக்கும். காயம் நன்றாக ஆறும் வரை மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற வேண்டும்.
வீட்டுக்குத் திரும்பியவுடன் காயம் முற்றிலுமாக ஆறும் வரை அந்த இடத்தில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். தினமும் காயக் கட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அறுவைச் சிகிச்சை செய்ய கீறிய இடத்தில் சிகப்பு நிறம் தெரிய ஆரம்பித்தால் காயம் ஆறிவருவதாகக் கொள்ளலாம். மஞ்சள் நிறம் இருந்தால் ஆறாமல் சீழ் இருப்பதாகக் கொள்ளலாம்.
உயர்வான நிலையில்…: காயம் முழுவதும் ஆறும் வரை காலை உயர்வான நிலையில் தூக்கி வைத்துக் கொள்வது நல்லது. இப்படி வைத்துக்கொண்டால் வலி இருக்காது.
அதிக செலவு தேவையா? மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் 100 சர்க்கரை நோயாளிகளில் 20 பேருக்கு கால் தொடர்பான பாதிப்புகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. மேலும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளாமல் கால்கள் பாதிக்கப்படும் நிலையில் குறைந்தபட்சம் 12 தினங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்க வேண்டியிருக்கும். இதனால் ரூ.20 ஆயிரம் வரை செலவாகும். எனவே கால்களைச் சர்க்கரை நோயாளிகள் பாதுகாப்பதே சிறந்த வழியாகும்.
சிறுநீரகங்கள்: ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக உள்ள நிலையில் ஓசையின்றி சிறுநீரகங்களையும் தாக்கத் தொடங்கும். சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்ளாத நிலையில் சர்க்கரை நோயாளிக்கு ஐந்து ஆண்டுகள் கழித்தே சிறுநீரகப் பாதிப்பு தெரியும். சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) ஏற்படும் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் பாதிக்கப்படுவதற்கு சர்க்கரை நோயே காரணம்.
எனவே சர்க்கரை நோயாளிகள் முன்னெச்சரிக் கையாக இருப்பதன் மூலம் சிறுநீரக செயலிழப்பை எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும். அதாவது, சர்க்கரை நோய் இருப்பது தெரிந்த உடனேயே சிறுநீரகங்களின் செயல்பாட்டைக் கண்டறிய சிறுநீர்ப் பரிசோதனையும் செய்துகொள்வது அவசியம்.
சோதனை என்ன? காலையில் எழுந்தவுடன் முதலில் வெளியேற்றும் சிறுநீரைப் பரிசோதனைக்குக் கொடுக்க வேண்டும். சிறுநீர்ப் பரிசோதனையில் “மைக்ரோ ஆல்புமின்’ என்ற புரதத்தின் வெளியேற்ற அளவு 30 மைக்ரோகிராம் வரை இருந்தால் ஆபத்தில்லை.
இந்த அளவைத் தாண்டியிருந்தால் சர்க்கரை நோய் மருத்துவ நிபுணரின் ஆலோசனைப்படி சிறுநீரகம் பாதிக்கப்படாமல் இருக்க சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். இதேபோன்று ரத்தப் பரிசோதனையில் யுரியாவின் அளவு 40 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தாலும் சிறுநீரகங்களைக் காத்துக்கொள்ள சிகிச்சை அவசியம்.
உயர் ரத்த அழுத்தமும் சிறுநீரகப் பாதிப்பும்: உயர் ரத்த அழுத்த நோய்க்கும் சிறுநீரகப் பாதிப்புக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் ரத்த அழுத்த அளவை உயர் நிலையில் 140 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் கீழ் நிலையில் 90 எம்எம்எச்ஜி என்ற அளவிலும் பராமரிக்க வேண்டும். இந்த அளவில் 1 எம்எம் கூடினால்கூட உஷார் அடைவது நல்லது. ரத்த அழுத்தம் அதிகரிக்கும் நிலையில், அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் தடுக்க “ராம்பிரில்’ என்ற சிறந்த மாத்திரை உள்ளது.
மட்டன் வேண்டாம்: உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை உள்ள சர்க்கரை நோயாளிகள் மட்டனைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதில் புரதச் சத்து உள்ளது. வாரத்துக்கு இரண்டு நாள்கள் மீன் சாப்பிடலாம். வாரத்துக்கு ஒரு நாள் சிக்கன் சாப்பிடலாம்.
புகை வேண்டாம்: புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக சிறுநீரகங்களின் ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்படும். மேலும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாமல், சிறுநீரில் ஆல்புமின் (புரதம்) அதிகமாக வெளியேறும் நிலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.
மூன்று தடவை…: சர்க்கரை நோய் இருப்பது தெரிந்தவுடன் ஆறு மாதத்துக்குள் மருத்துவரின் பரிந்துரைப்படி இரண்டு அல்லது மூன்று தடவை சிறுநீரில் மைக்ரோ ஆல்புமின் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். அப்பாதுதான் சிறுநீரகங்கள் பாதிக்கப்படாமல் எளிதாகத் தடுத்துக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment