Wednesday, June 18, 2014

தொண்டை வலி, காது வலி, குறட்டையா? அலட்சியம் வேண்டாம்!

முடிந்த அளவு, காய்ச்சி ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும்; குறைந்த விலையில் கிடைக்கிறது என, கண்ட குளிர்பானங்களை வாங்கி குடிப்பதை கைவிட வேண்டும்; சாப்பிடும் முன் கைகளை கழுவி விட்டு சாப்பிட வேண்டும் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வறுத்தெடுக்கிறது. வறட்சி காரணமாக, தாகம் அதிகமாக, கண்ட இடங்களில் கிடைக்கும் தண்ணீர், கூல் டிரிங்ஸ் குடிப்பதால், டான்சில்ஸ் பாதிப்பு (தொண்டை வலி), செவித்திறன் பாதிப்பு, குறட்டை ஏற்படும். அலட்சியம் காட்டினால் குறட்டையால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

1. 'டான்சில்ஸ்' பாதிப்பு என்றால் என்ன?
தொண்டை சதை வளர்ச்சி தான் இப்படி அழைக்கப்படுகிறது. தற்போது, அக்னி நட்சத்திரம் முடிந்தாலும், வெயில் இன்னும் வறுத்தெடுக்கிறது. தாகம் தீர்க்க தண்ணீர், குளிர்பானம் என, எதையாவது குடிக்கிறோம். இது, தரமானதாக இல்லாத பட்சத்தில், நம் தொண்டையில் பாதிப்பை ஏற்படுத்தும். நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும், ஜலதோஷத்தால் சளி உண்டாவதாலும், தொண்டையில் சதை வளர்கிறது. இதைத்தான் டான்சில்ஸ் என்கிறோம். இதனால், வலியும் ஏற்படும்.

2. அடினாய்டு பாதிப்பு என்றால் என்ன?
தொண்டைக்கும், மூக்குக்கும் பின்னால், அடினாய்டு எனும், தசை பகுதி உள்ளது. மூக்கு வழியாக காற்று மூலம் பரவும் கிருமிகளை உடலினுள் செல்ல விடாமல் தடுக்கிறது. சில சமயம் இந்த சதை வளர்ந்து, மூக்கின் பாதையை அடைத்து விடும். இந்த குழந்தைகள் வாய் வழியாக சுவாசிப்பதால், இவர்களது பற்கள் துருத்திக் கொண்டு வளர ஆரம்பிக்கும். 90 சதவீத குழந்தைகள், இந்த அடினாய்டு பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

3. இந்த பிரச்னை குழந்தைகளையும் பாதிக்குமா? 'ஆபரேஷன்' தான் தீர்வா?
டான்சில்ஸ் பிரச்னை, வயது வித்தியாசம் இல்லாமல், பெரும்பாலும் அனைவரையும் பாதிக்கிறது. டான்சில்ஸ், அடினாய்டு சதை பகுதியில் வலி, மருந்து மாத்திரைகள் பயன்பாட்டால் சரியாகிவிடும். சரியாகா விட்டாலோ, மாதம் தோறும் இதுபோன்ற பாதிப்பு வந்தாலோ, அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுவதே சிறந்தது.

4. இதற்கான நவீன சிகிச்சை வசதிகள் வந்து விட்டனவா?
மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியால், அதிநவீன சிகிச்சைகள் வந்து விட்டன. ஆரம்பத்தில் டான்சில்ஸ் சதையை, மருத்துவர்கள், கத்தியால், ஒரே சீவாக சீவி குணப்படுத்தினர். பின், டான்சில்ஸ் சதைப்பகுதியை மட்டும் மிக நுணுக்கமாக அகற்றும், 'டிசக்ஷன்' முறை வந்தது. இன்றைய அதிநவீன சிகிச்சை முறையான லேசர் அறுவைச் சிகிச்சை மூலம் கத்தியின்றி, ரத்தமின்றி, மிக குறைந்த வலியுடன் செய்யப்படுகிறது. இது மிகவும் துல்லியமான சிகிச்சை. இவை தவிர, அறுவைச் சிகிச்சையில், 'கோயாப்லேடர்' மற்றும், 'டிப்ரைடர்' போன்ற தொழில்நுட்ப கருவிகள் மூலம், நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

5. டான்சில்ஸ் பிரச்னையால் செவிதிறன் பாதிக்கும் என்பது சரியா?
தொண்டைக்கும், காதுக்கும் இணைப்புக் குழாய் உள்ளது. டான்சில்ஸ் பகுதியில் தொற்று காரணமாக ஏற்படும் பாதிப்பு, காதின் நடுப்பகுதி வரை பாதிக்கும். காதின் நடுப்பகுதியில், நீர் சேர்ந்து விடுவதால் கேட்கும் திறன் பாதிக்கும். காதில் உள்ள நீரை அகற்ற வேண்டும். சில நேரங்களில் தேங்கிய நீர், சளி போன்றோ, பசை போன்றோ மாறிவிட வாய்ப்புள்ளது. அப்போது, சிறு துளையிட்டு அவற்றை அகற்ற வேண்டும். அலட்சியம் காட்டினால், செவித்திறன் பாதிப்பு பெரிதாகி விடும்.

6. இந்த பிரச்னைகளுக்கும், குறட்டைக்கும் என்ன தொடர்பு? குறட்டை வர, வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?
காது, மூக்கு, தொண்டை ஆகியவை, ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை. ஒன்று பாதிப்பு அதிகமானால், மற்ற பகுதிகளையும் பாதிக்கும். டான்சில்ஸ் பிரச்னை நீடிப்பால், சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குறட்டை ஏற்படுகிறது. குழந்தைகளை பொறுத்தவரை, டான்சில்ஸ், அடினாய்டு சதை வளர்ச்சியால், சுவாசப்பாதை அடைப்பட்டு குறட்டை வரலாம். பெரியவர்களில் சிலருக்கு தாடை சிறிதாகவும், நாக்கு பெரிதாகவும் இருக்கும். வாயில் இடம் போதாமல் சுவாசக்குழாயை அழுத்திக் கொண்டிருக்கும்; இதனாலும் குறட்டை வரும். டான்சில்ஸ் பிரச்னை தவிர, கழுத்தின் நீளம் குறைவு, உடல் பருமன் அதிகரிப்பு, மூக்கில் எலும்பு பாதிப்பு போன்ற காரணங்களாலும், குறட்டை வர வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு வரும் என்பதால், கவனமாக இருக்க வேண்டும்.

7. குறட்டை தொடர்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
குறட்டை தொடர்வதால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள், மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு. சரியாக தூக்கம் வராது. ஏழு மணி நேரம் வரை தூங்கி எழுந்தாலும், அசதி தொடரும். புத்துணர்ச்சி இன்றி, பகல் நேரத்திலும் தூக்க கலக்கமாகவே இருக்கும்.

8. குறட்டையால் உயிருக்கு ஆபத்து என கூறப்படுகிறதே?
குறட்டை உள்ளோருக்கு ஏற்கனவே சுவாச பிரச்னை இருக்கும். இவர்கள் மது குடித்துவிட்டு உறங்கும் நேரத்தில், நுரையீரல் வரை சென்று திரும்ப வேண்டிய சுவாசக்காற்று, நுரையீரலில் தேங்கி பாதிப்பு வரும். இதுபோன்று, தூக்க மாத்திரை போட்டு தூங்குவோருக்கும், பாதிப்பு அதிகம் வர வாய்ப்பு உள்ளது. சுவாச பாதிப்பு ஏற்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறையால், கோமா நிலைக்கு சென்று விடுவர். அந்த நேரத்தில் கவனிக்காமல் விட்டால், உயிரிழப்பும் ஏற்பட்டு விடும். இதை, 'ஸ்லீப் அப்னியா' என்பர். 
'நேற்றிரவு நன்றாகத்தான் படுத்தார்; காலையில் இறந்து கிடக்கிறார்' என, கூறுவதுண்டு. இது போன்ற பாதிப்பு தான், அதற்கு காரணம்.

9. டான்சில்ஸ் பாதிப்பில் இருந்து தப்ப என்ன வழி?
சுகாதாரம் தான் முக்கியம். குடிக்கும் தண்ணீர், பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். முடிந்த அளவு, காய்ச்சி ஆற வைத்த தண்ணீரையே குடிக்க வேண்டும். சாலையோர உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிடக் கூடாது. குறைந்த விலையில் கிடைக்கிறது என, கண்ட குளிர்பானங்களை வாங்கி குடிப்பதை கைவிட வேண்டும். சாப்பிடும் முன் கைகளை நன்கு கழுவி விட்டு சாப்பிட வேண்டும். நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க, இதுவே சிறந்த வழி.

டாக்டர் ரவி கே.விஸ்வநாதன்,
ஏ.வி.எம்., மெடிக்கல் ஈ.என்.டி., 
ஆராய்ச்சி மையம், மயிலாப்பூர், சென்னை-4.

No comments:

Post a Comment